பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு. - kalviseithi

Sep 25, 2021

பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு.

 

பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்துகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு  பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2022- 23ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதலாம்.

இதற்கிடையே கேட் தேர்வை எழுத ஆகஸ்ட் 30 முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க, நேற்று (செப்டம்பர் 24-ம் தேதி) கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று பெரும்பான்மையான மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்நிலையில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஐஐடி காரக்பூர்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஐடி காரக்பூர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. அதேபோலத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி