நவோதயா பள்ளிகளில் 1,616 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? தெளிவான விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

நவோதயா பள்ளிகளில் 1,616 ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? தெளிவான விளக்கம்!

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக கிடைக்கும்.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidhyalaya Samithi or NVS) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


இந்த பள்ளிகளில் குரூப் ஏ, குரூப் பிரிவில் பணிபுரிவதற்காக முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகள் என மொத்தம் 1616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி முதல்வர் பொறுப்புக்கு 12 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 397 பேர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 683 பேர், பயிற்சி அளிக்கப்பட்ட மூன்றாவது மொழி ஆசிரியர் பதவிக்கு 343 பேர், இதரவகை ஆசிரியர்களாக 181 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முதல்வர் பதவிக்கு 50 வயதுக்கு உள்ளும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 40 வயதுக்குள்ளும், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 35 வயதுக்குள்ளும், இதர ஆசிரியர்கள் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும். முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பட்ட மேற்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்து பிஎட் முடித்து பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை படிப்பு முடித்து பிஎட் பெற்றிருக்க வேண்டும். பிற ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட் முடித்து இருக்க வேண்டும்.

முதல்வர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 800 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.47 ஆயிரத்து 600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100ம், பயிற்சி பெற்ற இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு ரூ.44 ஆயிரத்து 900 முதல் ரூ.1.42 லட்சத்து 400 வரையும் மாத சம்பளமாக கிடைக்கும்.

CBT (Computer Based Test)முறை மற்றும் நேர்க்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பதவிக்கு ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,800, மற்றவர்களுக்கு ரூ.1500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. இந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதளம் சென்று recruitment link என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படைத் தகவலையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்திசெய்ய வேண்டும்.விண்ணப்பம் செய்ய ஜூலை 22ம் தேதி கடைசி நாளாகும்.


கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click & Download  here செய்து அறிந்து கொள்ளலாம்.


 மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Click & Download here செய்து பயன்பெறலாம்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி