மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சட்டத்துறை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், குறைதீர் மன்றங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழக்குகளை நடத்த தனி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
இவர்களது பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். தற்போது நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்களின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சட்டத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் அல்லது சட்டக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
1961-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அகில இந்திய வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்களின் சட்டப் பயிற்சி அனுபவத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு வழக்கறிஞர்கள் குழுவில் சேர்க்க பரிசீலிக்கப்படுவார்கள்.
அவர்கள் கையாண்ட வழக்குகளின் தன்மை, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை கையாண்டதில் வழக்கறிஞரின் திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
வருமான வரி, சுங்கம், ஜிஎஸ்டி, பிஎம்எல்ஏ போன்ற சிறப்பு சட்டங்களில் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த மன்றங்களில் மத்திய அரசின் சிறப்புக் குழுக்களுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
10 ஆண்டு சட்டப் பணி முன் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் அவர்களின் சட்டத்திறன் அடிப்படையில் வழக்கறிஞர்கள் குழுவில் சேர்க்க பரிசீலிக்கப்படுவார்கள்.
இதற்கான செயல்முறையின்போது ஒரு வழக்கறிஞரின் ஒட்டு மொத்த செயல்திறன் பதிவு, நடத்தை, நேர்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள், ஆவணங்களின் உண்மைத்தன்மை அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்குகளிலும் தண்டிக்கப்படவில்லை. பார் கவுன்சில் அல்லது தகுதியான அதிகாரிகளால் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படவில்லை என் பதை தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பதவியை பயன்படுத்தியிருந்தால், சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வழக்கறிஞர்களின் செயல்திறன் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும்.
நீதிமன்ற அவமதிப்பு, தொழில்முறை ஒழுங்கீனம் அல்லது நீதிமன்றத்தால் தண்டனை பெறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசால் எந்த நேரத்திலும் வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.
மத்திய அரசு வழக்கறிஞர் குழுவில் தேர்வு செய்யப்படுபவர் அமைச்சகம்/துறை/நிறுவனம் தொடர்பான தகவல்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி