தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2026

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

இந்தக் கார்ப்பரேட் காலகட்டத்தில், தமிழ் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும் என ஆணவத்தோடு சிலர் இழிவு படுத்துகிறார்கள்.  அதற்குக் காரணம் இந்தியாவிலேயே  ஒரு மாநிலத்தின் தாய்மொழியை மொழிப் பாடமாகக் கூடப் படிக்காமல் அரிச்சுவடியிலிருந்து ஆராய்ச்சிக் கல்விவரை படிக்கும் வாய்ப்புள்ள மிகக் கழிசடையான சூழ்நிலை தமிழ்நாட்டில்தான் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு  கேவலம். கிடையாது.


தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழை ஒரு மொழிப்பாடமாகவேனும் கற்க வேண்டும் என்ற ஆணையைத் தமிழக அரசு முன்பு கொண்டு வந்தது. அப்பொழுது, "எங்கள் குழந்தைகளுக்கு அது கூடுதல் சுமையைத் தரும்" எனத் தமிழகத்தில் பிழைக்க வந்த  பிற மாநிலத்தைச் சேர்ந்த  சில கல்வி நிறுவன உரிமையாளர்கள்  வழக்கு மன்றம் சென்று, . அதற்குத் தடை வாங்கி விட்ட நிலையும் இங்குதான் உள்ளது.


தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர்.  ஆம்.  அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டடப் பொறியியல் பாடம் ( B.E. Civil ) பல ஆண்டுகளாகத் தமிழ்வழியில் கற்பிக்கப் பட்டு வருகிறது.  +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சிறந்த  மாணவர்கள் கூடத் தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் இந்தப் பாடப்பிரிவில் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக  அவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்துள்ளது. அதனால் தமிழ்,  அவர்கள் வாழ்வை வளப்படுத்தி உள்ளதைத் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.


இவ்வாண்டு கட்டடப் பொறியியலில்

தமிழ்வழியில்  பயின்றவர்கள் 33 பேர்.

அதில் பலர் உயர்கல்விக்கும், தனியார் நிறுவனப் பணிகளுக்கும் சென்று விட்டனர். இவர்களைத் தவிர, எஞ்சியிருந்த ஏழு பேர் தமிழக அரசுப்பணிக்குத் தேர்வு எழுதி வெற்றி  பெற்றுத் தங்கள் முதல் முயற்சிலேயே அரசுப் பணியில் சேர ஆணை பெற்றுள்ளனர். தங்களது இருபத்து மூன்றாம் வயதின் தொடக்கத்திலேயே உதவிப் பொறியாளர்களாக இவர்கள் பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  அதன்விவரம் ............


01  தினேஷ்  --           நெடுஞ்சாலை

02  அத்தீஸ்வரன் --  நெடுஞ்சாலை

03  ஜெயப்பிரியா -- நெடுஞ்சாலை

04  செண்பகம் --       நீர்வளம்

05  ஹரிப்பிரியா --   நெடுஞ்சாலை

06  கீர்த்தனா --        . ஊரகவளர்ச்சி

07  ரோகிணி --          நீர்வளம்


இவர்கள் அனைவரும் கட்டடப் பொறியியல் மாணவர்கள் . இவர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து +2 வகுப்பு வரை தமிழ் வழியிலேயே கல்வி கற்று, பொறியியல் படிப்பையும் தமிழ்வழியிலேயே பயின்றவர்கள் . அதில் செல்வி செண்பகம், திருப்பூர் சிங்கனூர்  தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று இத்தகைய நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது

 

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குத் தற்பொழுது அரசுப் பணியில் 20% மட்டுமே சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். முதல் வகுப்பிலிருந்து +2 வகுப்பு முடியத்  தமிழ் வழியில் கற்கும் மாணவர்களுக்கு அரகப் பணியில் 80% விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசு தமிழ் வழியில் பயின்ற மாணாக்கர்களுக்கு அரசுப் பணியில் 80% ஒதுக்கீடு வழங்கி, அதைச் செயல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது,


தமிழ் வழியில் பயின்று சிறப்பான தேர்ச்சி பெற்றுத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உயர் பதவிக்கு

வந்துள்ள மாணாக்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.


(  படம் --  தாய்த் தமிழ்ப்பள்ளி மாணவி செண்பகம் மற்றும் மாணவ  வெற்றியாளர்கள் )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி