தமிழகத்தில் 144 தடை உத்தரவால் எதெல்லாம் இயங்கும்? எதெல்லாம் இயங்காது? முதல்வர் பேரவை செய்தி குறிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2020

தமிழகத்தில் 144 தடை உத்தரவால் எதெல்லாம் இயங்கும்? எதெல்லாம் இயங்காது? முதல்வர் பேரவை செய்தி குறிப்பு!



இந்த உத்தரவின்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :

1 . அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து , தனியார் போக்குவரத்து , மகிழுந்துகள் , ஆட்டோ , டாக்ஸி போன்றவை இயங்காது . மாநிலங்களுக்கு இடையேயும் , மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது .

2 . அத்தியாவசியப் பொருட்களுக்கான , பால் , காய்கறி , மளிகை , இறைச்சி , மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் , வணிக வளாகங்களும் , பணிமனைகளும் இயங்காது .

3 . அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது . அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம் , காவல் துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை , சிறைத்துறை , பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை , நீதிமன்றங்கள் , உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும் . எனினும் , தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும் .

4 . தனியார் நிறுவனங்கள் , தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் . எனினும் , அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் .

5 . அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது .

6 . அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது . எனினும் , இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது .

7 . வீடுகளில் இல்லாமல் , விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி , பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் . அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் . வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு , நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ , அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு , நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் , அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் , மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் .

வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு , இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

தடை உத்தரவால் , கர்ப்பிணிப் பெண்கள் , முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து , அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் , மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும் , விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை .

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி மாண்புமிகு அம்மாவின் அரசு பரிசீலித்து வருகிறது . இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் . கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி